பதிவு செய்த நாள்
13
ஏப்
2024
03:04
சோழவரம்:சோழவரம் அடுத்த அருமந்தை கிராமத்தில் அமைந்துள்ள, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், 19ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு மூலவர் பெருமாளுக்கு தனிசன்னிதி, ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனி சன்னிதிகள் அமைந்து உள்ளன.
பிரமாண்டமாக காட்சி தரும் சன்னிதி கோபுரம், முகப்பில் கருங்கற்களால் வடிமைக்கப்பட்ட மண்டபம், மண்டபத்தின் துாண்களில் செதுக்கப்பட்டுள்ள அழகிய சிற்பங்கள், கோவில் சன்னிதியை சுற்றிலும், 15அடி உயரத்திற்கு கருகற்களால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர், முகப்பில் கோபுரம் இல்லாத நுழைவாயில் ஆகியவை உள்ளன. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவிலில் ஒருகால பூஜை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதேசி, தமிழ்ப் புத்தாண்டு தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவில், பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் இருக்கிறது. கோவில் சுற்றுச்சுவர்களில் மரம், செடிகள் வளர்ந்து உள்ளன. கோவிலில் கொடிமரம் இல்லை. உடைந்த கொடிமரத்தின் மரங்கள், ஆங்காங்கே போடப்பட்டு உள்ளன. மண்டபத்தின் துாண்களில் உள்ள சிற்பங்கள், வெள்ளை வர்ணம் பூசி மறைக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் சேதமடைந்து கிடக்கின்றன. இந்த கோவிலுக்கு அருமந்தை பகுதியில் ஏராளமான சொத்துக்கள் இருந்தும், கோவில் புனரமைக்கப்படாமலும், சரிவர பராமரிக்கப்படாமலும் இருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோவிலை, அதன் பழமை மாறாமல் புனரமைத்து, குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் எனவும், கோவில் சொத்துக்களை அனுபவிப்பவர்களிடம் உரிய வருவாய் ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.