பதிவு செய்த நாள்
14
மே
2024
01:05
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சூரிய பிரபையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 10 நாட்கள் பிரம்மோற்சவம், நேற்று முதல் துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை மூஷிக வாகன புறப்பாடு நடந்தது. பிரம்மேற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, துவஜா ரோஹணம் எனும் கொடியேற்ற வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா கோஷமிட்டனர். பின், முருகப்பெருமானை தரிசித்தனர். அதைத்தொடர்ந்து, மங்களகிரி விமான புறப்பாடு நடந்தது. இரவும் மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதியுலா நடக்கிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை, சூரிய பிரபையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இரவு சந்திர பிரபை புறப்பாடும் நடக்கிறது.
வரும் 15ம் தேதி இரவு 7:00 மணிக்கு, ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. 16ம் தேதி நாக வாகனத்திலும் சுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 17ம் தேதியும், அடுத்த நாள் இரவு யானை வாகன புறப்பாடும் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான 19ம் தேதி காலை தேர்த்திருவிழா நடக்கிறது. குதிரை வாகன புறப்பாடு, 20ம் தேதி நடக்கிறது. 21ம் தேதி இரவு 7:00 மணிக்கு வடபழனி ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகமான, 22ம் தேதி காலை 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதிஉலா நடக்கிறது. காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. பின், சுப்பிரமணியர் வீதி உலாவினை அடுத்து கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. வரும், 23ம் தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது.