பதிவு செய்த நாள்
14
மே
2024
03:05
அன்னுார்: கணேசபுரம் புற்றுக்கண் மாரியம்மன் கோவிலின் 29வது ஆண்டு, திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது.
கோவை மாவட்டம் அன்னுார் அருகே கணேசபுரத்தில் அருள்மிகு புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 29வது ஆண்டு திருக்கல்யாண உற்சவத் திருவிழா கடந்த 5ம் தேதி மந்தை முனியப்பன் பொங்கல் விழாவுடன் துவங்கியது. அதை தொடர்ந்து 7ம் தேதி பூச்சாட்டுதல், 8ம் தேதி கம்பம் நடுதல் நடைபெற்றது. 10ம் தேதி நூற்றுக்கணக்கான தாய்மார்கள் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக விநாயகர் பொங்கல், விநாயகர் அலங்கார பூஜை, அணிக்கூடை வருதல், வாண வேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று (14ம் தேதி) அதிகாலை சக்தி சிவன் பூங்கரகம் எடுத்து அழைத்து வருதல், பின் புற்றுக்கண் மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் பொங்கல், அலங்கார பூஜை, அக்னி கரகம், அலகு குத்தி வருதல், மாவிளக்கு, முளைப்பாரி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை 15ம் தேதி மறு பூஜை, மஞ்சள் நீராடுதல் போன்ற நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெறுகிறது.