பதிவு செய்த நாள்
15
மே
2024
10:05
சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அருள்பாலித்து வருகிறார் கனககுசாம்பாள் உடனுறை சோழபுரீஸ்வரர் சுவாமி. பழமையான இந்த கோவிலில், ஆருத்ரா, பிரதோஷ வழிபாடு, பங்குனி உத்திரம், வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் உற்சவர் பெருமான், சிம்ம வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினார். நேற்று மாலை அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். வரும் 26ம் தேதி வரை தினசரி பல்வேறு வாகனங்களில் உற்சவர் எழுந்தருள உள்ளார்.
கருட சேவை; பெரியபாளையம் அருகே, பெருமுடிவாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகோதண்டராம சுவாமி கோவில் பழமை வாய்ந்தது. இங்கு நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன், 10 நாள் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் உற்சவர் காலை, இரவு வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார். இன்று கருட சேவை நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு கருட வாகனத்திலும், இரவு, 7:30 மணிக்கு சந்திர பிரபையிலும் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார்.