பக்தனான பிரகலாதனை உடனடியாக காக்க வேண்டும் என்பதற்காக துாணில் இருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். ‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை’ என்பார்கள். அதாவது சரணடைந்தவரை காக்க விரைந்து வருபவர் நரசிம்மர். அசுரனான இரண்யனிடம் அவனது மகன் பிரகலாதன், “பரம்பொருளான மகாவிஷ்ணு துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்’ என்றான். அதை ஏற்க மறுத்த இரண்யன், மகன் காட்டிய துாணைப் பிளக்க முயன்றான். அதில் இருந்து கர்ஜித்தபடி சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக நரசிம்மர் அவதரித்தார். கூரிய நகங்களால் இரண்யனின் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக அணிந்து கொண்டார். இவர் அவதரித்த நாளான நரசிம்ம ஜயந்தி மே 15ல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெருமாளுக்கு பானகம் படைத்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.