பதிவு செய்த நாள்
30
மே
2024
01:05
கன்னியாகுமரியில் கடல்நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்ய இன்று குமரிக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. 1892ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் வந்து புனிதம் அடைந்த பாறை அது. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன். அன்று நரேந்திரன் வந்த பாறைக்கு இன்று தியானம் செய்யச்செல்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. அதன் சுவாரஸ்யப்பின்னணியை விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.
மோடியும், விவேகானந்தரும்..! :பிரதமர் நரேந்திரமோடி டில்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வரும் அவர், விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மூன்று நாள் தியானம் செய்கிறார். இதேபோல் 1892ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி, கன்னியாகுமரிக்கு வந்தார் சுவாமி விவேகானந்தர். பகவதி அம்மன் தவம் புரிந்த பாதச்சுவடு இருக்கும் பாறையை காட்டி அங்கு செல்ல வேண்டும். அழைத்துச்சென்று விட இயலுமா? என அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மீனவரிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு அவர் கேட்ட தொகை விவேகானந்தரிடம் இல்லை . உடனே கடலில் குதித்து நீந்தியே பாறையை அடைந்த விவேகானந்தர் அந்த பாறையில் தவம் செய்தார். டிசம்பர் 25, 26, 27 என மூன்று தினங்கள் அந்தப் பாறையிலேயே தங்கி தவம் செய்தார், சுவாமி விவேகானந்தர். 1892ம் ஆண்டு விவேகானந்தர் தவம் செய்த நிலையில் 1893ம் ஆண்டு சிகாகோ மாநாட்டில் உரை நிகழ்த்தினார். அந்தவவேள்வி மறு ஆண்டிலேயே சுவாமி விவேகானந்தரை வானாளாவிய உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. அந்த பாறையின் பெருமைக்கும், அருமைக்கும் அது ஒரு சாட்சி.
பகவதி அம்மனின் தவம்!
இந்த பாறையில் தவம் செய்தவர்களின் முன்னோடி பெண் தெய்வமான பகவதி அம்மன்தான். பாணாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்ய பார்வதி தேவி எடுத்த அவதாரமே பகவதி அம்மன். பாணாசுரன் அரக்கனோ, முனிவர்கள், தேவர்கள் பிற விலங்குகள் யாராலும் தான் கொல்லப் படக்கூடாது என வரம் வாங்கியவன்.முனிவர்களையும், தேவர்களையும் கொடுமை செய்து வந்தவன். அவனை கன்னி வடிவிலான பகவதியாக வந்து வதம் செய்தார் பகவதி அம்மன். அதன் நினைவாகத்தான் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அந்த பகவதிஅம்மன் சிவபெருமானை வேண்டி ஒற்றைக்காலில் தவம் புரிந்த பாறையும் இது தான். இப்போதும் கூட அம்மன் பாதம் என்னும் பெயரில் கால் தடம் தரிசனமும் இங்கு செய்வது வழக்கம். பகவதி அம்மன் தவம் புரிந்த பாறை என்பதாலேயே விவேகானந்தர் இங்கு சென்றார். மூன்று நாள்கள் தவம் செய்தார். அதே பாணியில் நரேந்திரனை அடியொற்றி, நரேந்திரமோடியும் செல்கிறார். மூன்றுநாள்கள் தியானம், தவம் செய்கிறார்.
மோடியின் துணிச்சல்! நாடெங்கிலும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 1ம்தேதி நடக்கிறது. அன்று தான் பிரதமர் நரேந்திரமோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது. ஆனால், அன்றும் கூட எவ்வித சலனமும் இல்லாமல் தியானத்தில் இருக்கும் மோடி, அன்றைய நாளில் நண்பகலுக்கு மேல் விவேகானந்தர் நினைவிடத்தில் இருந்து கரை திரும்புகிறார். சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி, தான் பயாலஜிக்கல் முறைப்படி பிறந்திருக்க வாய்ப்பில்லை. தன்னிடம் சில ஆற்றல்கள் இருக்கின்றன எனப்பே சியிருந்தார். இப்போது விவேகானந்தர் போலவே, மூன்று நாள்கள் தியானம் செய்யவும் செல்கிறார் மோடி. அவரது ஆன்மிகத்தேடலின் அங்கமாகவும் இச்சம்பவம் பார்க்கப்படுகிறது.
–என்.சுவாமிநாதன்