பதிவு செய்த நாள்
30
மே
2024
05:05
செந்துறை, நத்தம் செந்துறை அருகே குடகிப்பட்டி ஊராட்சி மணக்காட்டூர் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் நடந்த கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி கடந்த மாதம் மே.23 சுவாமி சிலை செய்ய பிடிமண் எடுத்துக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு கிராம தேவதைகளுக்கு கனி வைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து முத்தாலம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் தொடங்கினர். தொடர்ந்து தேவராட்டம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் வாணவேடிக்கைகளுடன் முத்தாலம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலுக்குள் சென்றது. பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.பின்னர் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் மின் ரதத்தில் அம்மன் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்தது. தொடர்ந்து இன்று காலை அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம், அக்கினிசட்டி எடுத்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். பின்னர் படுகளம் போடுதல், குட்டி கழுமரம் ஏறுதல், பந்தய கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கழுமரத்தில் போட்டி போட்டு கொண்டு ஏறி இலக்கை தொட்டனர். பின்னர் பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலையில் தீவட்டி பரிவாரங்கள், வாண வேடிக்கைகளோடு அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மணக்காட்டூர் ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்.