பதிவு செய்த நாள்
09
நவ
2012
10:11
திருப்பாச்சேத்தி: சிவகங்கை மன்னர் கொடுத்த "வெண்கல மேளம், மாசிக்களரி திருவிழாவில் மட்டுமே "கணீர்... கணீர் சப்தத்திற்காக இசைக்கப்படுகிறது. மன்னரின் பரிசான வெண்கல மேளத்தை பொக்கிஷமாய் பாதுகாக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியிருந்து 6 கி.மீ., தூரத்தில் உள்ளது மாரநாடு. இங்குள்ள காவல்தெய்வம் கருப்பணசாமி, தென் மாவட்டங்களில் பிரசித்தம். மாசிக்களரி திருவிழாவிற்கு அலைகடலென கூட்டம் திரளும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மாசிக்களரி திருவிழாவில், சிவகங்கை தேவஸ்தானத்தால் முதல் மரியாதையாக "பூமாலை சாத்தப்படுவது இன்று வரை தொடர்கிறது. இதற்காக சிவகங்கை மன்னர் கொடுத்த வெண்கல மேளம் அன்று ஒருநாள் மட்டும் இசைக்கப்படுகிறது. வெண்கல மேளம் வந்த கதையை இக்கிராமத்தினர் கூறியதாவது: சிவகங்கை மன்னர் முத்து விஜய ரெகுநாதரின் வைர மோதிரம் காணாமல் போனதாம்.கோடாங்கி, குறி சொல்பவர்களை அழைத்து வந்து, "காணாமல் போன வைர மோதிரம் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய சொல்லியுள்ளார். எந்த கோடாங்கியாலும் கண்டுபிடிக்க முடியாததால், கோபமடைந்த மன்னர்,கோடாங்கிகளை எல்லாம் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டாராம். அப்போது, துல்லியமாக கணித்து சொல்வதில் கெட்டிக்காரரான மாரநாடு கருப்பணசாமி கோயில் கோடாங்கியை பற்றி தளபதிகள் கூறியுள்ளனர். மன்னர், "மாரநாடு கருப்பணசாமி கோடாங்கியை, குதிரையில் சென்று அழைத்து வாருங்கள், என உத்தரவிட்டுள்ளார்.
மன்னர் அனுப்பிய குதிரை மீது ஏறாத கோடாங்கி நடந்தே சிவகங்கை சென்றுள்ளார். குறி சொன்ன கோடாங்கி, "வைர மோதிரம் திருடு போகவில்லை, உன் படுக்கையறையின் கீழே தான் கிடக்கிறது, என்றார். அதேபோல், வைர மோதிரம் தரையில் கிடந்துள்ளது. இதில் ஆச்சரியமும், அதிர்ச்சியடைந்த மன்னர், சரியாக குறி சொன்ன கோடாங்கியிடம், "என்ன வேண்டுமானாலும் கேள், என்றுள்ளார். அறையில் அடைத்துள்ள கோடாங்கிகளை முதலில் விடுவியுங்கள், மாசிக்களரி திருவிழாவின்போது, எனக்கு முதல் மரியாதையாக பூமாலை சாத்த வேண்டும் என, கருப்பணசாமி உருவில் கோடாங்கி கேட்டுள்ளார். அதன்படி, இன்று வரை மாசிக்களரி திருவிழாவின் போது, சிவகங்கை தேவஸ்தானத்திலிருந்து முதல் மரியாதையாக பூ மாலை சாத்தும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. கருப்பணசாமியின் அருளை உணர்ந்த மன்னர், மாசிக்களரி சாமியாட்டத்தில் எழுப்பப்படும் மேளச்சத்தம் "கணீர்... கணீர்... என சிவகங்கைக்கு கேட்கவேண்டும் என வெண்கலமேளத்தை காணிக்கையாக வழங்கினாராம். இதற்கான ஆதாரங்கள், இந்த வெண்கல மேளத்தில் "பழைய தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது.பரம்பரை மேளக்காரர் காளிமுத்து கூறுகையில், ""சிவகங்கை மன்னர் கவுரி மகாராஜா கொடுத்த வெண்கல மேளம் என மூதாதையர், கிராம பெரியோர்கள் கூறுவர். மாசிக்களரி திருவிழாவில் மட்டுமே வெண்கலமேளத்தில் கொட்டுவோம். மற்ற நாட்களில் சாதாரண மேளம் இசைப்போம். இதில் மேளம் கொட்டும்போது, கேட்போரும் ஆடும் அருள் கிடைக்கும் வல்லமை உண்டு, என்றார்.