திருப்பதி; திருமலையில் நடந்து வந்த வருடாந்திர மூன்று நாள் ஜேஷ்டாபிஷேகம் நிறைவடைந்தது.
திருமலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் ஆண்டிற்கு ஒருமுறை களையப்பட்டு திருமஞ்சனம் நடத்தப்பட்டு வருகிறது. திருமஞ்சனம் முடிந்த பின் முதல் நாள் வைர கவசமும், 2ம் நாள் முத்து கவசமும் உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும். நிறைவு நாள் திருமஞ்சனம் முடிந்த பின் களையப்பட்ட தங்க கவசம் செப்பணிடப்பட்டு மீண்டும் அணிவிக்கப்படும். இந்த உற்சவத்தை தேவஸ்தானம் ஜேஷ்டாபிஷேகம் என்று குறிப்பிட்டு வருகிறது. இந்த உற்சவத்தால் உற்சவமூர்த்திக்கும் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ள கவசத்திற்கும் ஏற்பட்டுள்ள சேதங்கள் கண்டறியப்பட்டு செப்பணிடப்பட்டு வருகிறது. அதன்படி 19ம் தேதி திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் துவங்கியது. முதல் நாள் திருமஞ்சனத்திற்கு பின் வைரகசவமும் நடைபெற்றது. நேற்று (20ம் தேதி) 2ம் நாள் திருமஞ்சனம் நடைபெற்றது. பின் உற்சவமூர்த்திகளுக்கு முத்து கவசம் சாற்றப்பட்டு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று விழா நிறைவாக காலை உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் தலை முதல் கால் வரை ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பின் களையப்பட்டு செப்பணிடப்பட்ட தங்க கவசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பூர்ணாஹூதி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.