அமாவாசை தினமான இன்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் குவிந்தனர். கோவில் உள்பிரகாரத்தில் ஸ்வாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு நிழலில் நிற்பதற்கான தகர செட், பக்தர்கள் வரிசையில் வருவதற்கான கியூ அமைத்தல் உள்ளிட்ட சிறப்பு முன்னோர்பாடுகள் என, எதுவும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யவில்லை. ஸ்வாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் இரண்டாம் பிரகாரத்தில், கடும் வெயிலால் நிற்க முடியாமல் நிழலுக்காக உள்பிரகார மதில் சுவரை ஒட்டி நின்றனர். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா முடிந்த பிறகு ஒவ்வொரு விஷேச தினத்திலும் ஸ்வாமி தரிசனம், திதி, தர்ப்பணம் கொடுப்பதற்கும் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருகின்றனர். ஆனால், கோவில் நிர்வாகம் டூவீலர், கார் உள்ளிட்ட வாகன பார்க்கிங்க்கு மட்டும் அதிக அளவில் வாகனங்கள் வந்தால் நிறுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்கின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் அன்னதானத்தை கொடுப்பதற்கும் கூட கோவிலுக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி கொடுக்க வேண்டும் என கறாராக கோவில் பணியாளர்கள் நடந்து கொள்கின்றனர் என பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். பல மணி நேரம் வெயிலில் கால் கடுக்க காத்திருந்து சாமி தரிசனம் செய்வதற்கு நின்றாலும், அறநிலையத்துறையினரின் செயலால் மன அமைதி மற்றும் நிம்மதி இல்லாமல் போகிறது என்கின்றனர் பக்தர்கள். மேலும், குழந்தைகள், முதியவர்களுடனும் வந்திருந்தவர்களில் ஒரு சிலர் வெயிலில் நிற்க முடியாமல் மாலையில் வந்து தரிசனம் செய்து கொள்ளலாம் என திரும்பிச் சென்றனர்.