பதிவு செய்த நாள்
08
ஜூலை
2024
12:07
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு நேற்று வந்த, முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து, வீணாதர தட்சிணாமூர்த்தியின், 2.5 அடி உயர ஐம்பொன் சிலை, 1997ல் திருடப்பட்டுள்ளது. இந்த சிலை, தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விற்பனைக்கு உள்ளது. இன்னும் சில மாதங்களில் தனி நபரின் கைக்கு ஏலம் மூலம் செல்ல உள்ளது. இது, தனிப்பட்ட நபரின் கைக்கு சென்று விட்டால், அவர்கள் சிலையை மறைத்து விடுவர். எனவே, தமிழக அரசு, சிலை கடத்தல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சிலையை மீட்க வேண்டும். மேலும், இந்த கோவிலின் கருவறையின் பின்புறச் சுவரில், தேவகோஷ்டம் என அழைக்கப்படும், லிங்கோத்பவர் சிற்பம், 4 அடி உயரம் உள்ளது. இந்த அமைப்பு, இருந்தால் மிகவும் தொன்மையான கோவிலாகும். இதை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆயில் பெயின்ட் அடித்து மறைத்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.