பதிவு செய்த நாள்
10
ஜூலை
2024
03:07
அவிநாசி; அவிநாசி அருகே பெரிய ஒலப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி வட்டம், வடுகபாளையம் கிராமம், பெரிய ஓலப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா ஸ்ரீ சென்னியாண்டவர் வேள்விக் குழு ஸ்ரீ விஜய் குருக்கள் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக கடந்த 7ம் தேதி சிவளாபுரி அம்மன் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து முதல் கால யாக வேள்வியில் மஹா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள்,கோ பூஜை, கலாகர்சனம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக வேள்வியில் கோபுர கலசம் வைத்தல், எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில், இன்று நான்காம் கால யாக பூஜையில் நாடி சந்தானம், மஹா பூர்ணாஹீதி,கலச புறப்பாட்டுடன் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரம், தச தரிசனம், மஹா தீபாராதனை, ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பெரிய ஓலப்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.