பதிவு செய்த நாள்
17
ஜூலை
2024
03:07
தங்கவயலில் நுாறாண்டு பழமையான கோவில்களில் இன்று வரை ஐதீக முறைப்படி வழிபாடுகள் நடந்து வரும் கோவில் தான், கென்னடிஸ் 3வது வட்டத்தில் உள்ள ஸ்ரீராமர் கோவில். இங்கு ராமானுஜர் சித்தாந்த சபையினர் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். கடந்த 1918ல் நந்தி துர்கம் சுகாதார அதிகாரிகள் உதவியால், மூங்கில் தட்டிகளால் குடிசை அமைத்து, வைணவ பெரியோர்கள், ஸ்ரீராமர் படத்தை வைத்து வழிபட்டனர். தாழ்த்தப்பட்டோர் மேனிலைக்கு உயர வேண்டும்; பக்தியில் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதை கருத்தில் கொண்டு சபையினர் வழிபட்டனர்.
ஆங்கிலேயர் சந்திப்பு; தங்கச் சுரங்க ஒப்பந்ததாரர் தம்புசாமி, பக்தியில் தீவிரமாக இருந்தபோது, அனைத்து மதத்தினரின் வழிபாடுகளுக்கு உறுதுணையாக இருந்த ஆங்கிலேய அதிகாரிகளை நாடினார்; கோவிலை விஸ்தரிக்க உதவுமாறு வேண்டினார். 1936ல் ஹட்சன் துரை என்பவர், இங்கிலாந்து செல்வதற்கு முன்பு, ராமர் கோவிலை பெரிதாக கட்டுவதற்கு உதவினார். ராமானுஜர் சித்தாந்த சபையையும் திறந்து வைத்தார். கடவுள் பக்தி இருப்பதால் மனம் துாய்மை பெறும். திருட்டு, கொள்ளை, சமூக விரோத செயல்களில் மனம் செல்லாது. எனவே தெய்வ வழிபாடு மிக அவசியம். ‘உங்களின் ராம ஜெயம் நல்ல வாழ்வு தரும்’ என தெரிவித்தார். காலங்கள் செல்ல, செல்ல 12 ஆழ்வார்களின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன. தினமும் திருப்பாவை பாசுரம், திருபிரபந்தம் கற்று கொடுக்கும் இடமானது.
பஞ்ச சமஸ்காரம்; அக்காலத்தில் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு கல்வியறிவு புகட்டவும் இச்சபை பெரும் முயற்சி மேற்கொண்டது. 1962ல் சென்னையில் இருந்த தோத்தாத்ரி ஜீயரை வரவழைத்து, 200 பேருக்கு ‘பஞ்ச சமஸ்காரம்’ என்ற முத்திரை ஸ்தானம் செய்யப்பட்டது. கடந்த 1965ல் சென்னையில் இருந்து அப்பன் சுவாமி ஜீயரை வரவழைத்து மேலும் 125 பேருக்கு பஞ்ச சமஸ்காரம் செய்தனர். கென்னடிஸ் பகுதியை சேர்ந்தவர் மட்டுமின்றி, தங்கவயலில் உள்ள பெரும்பாலான வைணவ பக்தர்கள் பஞ்ச சமஸ்காரம் செய்து கொண்டனர். பின், 1982ல் தமிழகத்தின் ஸ்ரீ பெரும்புதுாரில் இருந்து ஸ்ரீராமர் விக்ரஹம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை மூலவராக வழிபட்டனர். இதை தொடர்ந்து ‘கண்ணபிரான் -ருக்மணி’ சிலைகளை திருப்பதியில் இருந்து கொண்டு வந்தனர். இதையடுத்து திருப்பதியில் இருந்து, உற்சவ மூர்த்திக்காக ஸ்ரீராமர் பஞ்சலோக விக்ரஹம் எடுத்து வந்தனர்.
தலைமுறை; மார்கழி மாதம் 30 நாட்களும், திருப்பாவை பாசுர கைங்கர்யம் ஏற்று தலைமுறை தலைமுறையாக வணங்கி வருகின்றனர். கோவிலை உருவாக்கியவர்களின் காலத்திற்கு பின்னரும், அவரது வாரிசுகள் உறுப்பினர்களாக இருந்து, சேவை செய்கின்றனர். 106 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், பக்தி வழியாக தமிழை போற்றி பாதுகாத்து வருகின்றனர். தற்போதைய சந்ததியினரும் திருப்பாவை, திவ்யபிரபந்தம் ஓத வேண்டும் என்பதற்காக, கோவில் நிர்வாகிகள் தமிழை கற்று கொடுக்கும் பணிகளையும் செய்து வருகின்றனர். தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதிவைத்து பாசுரங்களை மனப்பாடம் செய்து வணங்குகின்றனர். ‘ஸ்ரீராமஜெயம் அனைவருக்கும் வாழ்வளிக்கும்’ என்ற நம்பிக்கையில் செயல்படுகின்றனர். ஹனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீராமநவமி, உறியடி மஹோற்சவம், மார்கழி நோன்பு உட்பட அனைத்து வைணவ விழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் நடத்தப்படுகிறது. தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலையில் 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
‘ஒவ்வொரு சனிக்கிழமையும் பஜனை; பாசுரம், சுவாமி கீர்த்தனைகள், ஹரிநாம சங்கீர்த்தனம் பாடுதல்; தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்; பிறருக்கு முன் மாதிரியாக திகழ வேண்டும்; பெரியோருக்கு கீழ்படிதல், ஒழுக்கம் மிக அவசியம்; தினமும் குளித்து நெற்றியில் நாமம் இட வேண்டும்; மாத சந்தா செலுத்த வேண்டும்; திரு நட்சத்திர பரிபாலனத்தை கடைபிடிக்க வேண்டும்’ என்பதை 1936 முதல் தற்போது வரை கடைப்பிடித்து வருகின்றனர். – நமது நிருபர் –