பதிவு செய்த நாள்
18
ஜூலை
2024
11:07
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடக்கும் பூச்சொரிதல் மற்றும் தேர் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 15 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக, அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சிறப்பு நிதி கோரப்பட்டது. தொடர்ந்து, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் மற்றும் சிவன் கோவில் ஆகியவற்றில் திருப்பணிகள் தொடங்கின. பின், அறநிலையத்துறை உயர்நிலை குழு ஒப்புதல் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட சில காரணங்களால் திருப்பணிகள் பாதியில் நின்று போனது. கோவிலில் உள்கட்டமைப்பு வசதிகள் இதுவரை சரிவர மேம்படுத்தப்படவில்லை. கோவில் சுற்றுப்புற துாய்மை, சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. இவற்றை ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். விடுமுறை நாட்கள் மற்றும் விழாக்காலங்களில், இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வருகின்றனர். பக்தர்கள் வந்து செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் கூடுதல் கட்டணம் கொடுத்து, ஆட்டோக்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.,க்கள், நான்கு எம்.பி.,க்கள் இருந்தும் கோவில் திருப்பணி மற்றும் மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்தவில்லை என்ற அதிருப்தி பக்தர்களிடம் நிலவுகிறது. திருப்பணிகளை விரைந்து முடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.