பதிவு செய்த நாள்
21
ஜூலை
2024
11:07
தங்கவயல்; உரிகம் பேண்ட் லைனில் எழுந்தருளியுள்ள சக்தீஸ்வரி மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.
உரிகம் பேண்ட் லைனில் எழுந்தருளியுள்ள சக்தீஸ்வரி அம்மன் கோவில் 1949ம் ஆண்டில் கட்டப்பட்டது. கோவில் அமைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. இக்கோவிலில் துவஜ ஸ்தம்பம், அம்மன் விக்ரஹம், நவக்கிரஹ சிலைகள், கால பைரவர், முனீஸ்வரர், பூரணி, புஷ்கரணியுடன் தர்மசாஸ்தா அய்யனார், சப்த கன்னியர்களான பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராஹி, கவுமாரி, சாமுண்டி, இந்திராணி, அம்மன் சிரசு உட்பட பல விக்ரஹங்கள் உள்ளன. இக்கோவிலில் ஐதீக முறைப்படி வழிபாடுகள் நடக்கின்றன. இக்கோவில் நிறுவிய காலம் முதலே ‘பலி’ கொடுப்பதில்லை. ஆடி விழா, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, சாய் பாபா குரு பூஜை என அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.
வெள்ளிக்கிழமைகளில் காலை 6:30 மணி முதல் 8:30 மணி வரையிலும், மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சக்தீஸ்வரி மாரியம்மனை வேண்டுவோருக்கு வேண்டிய வரம் கிடைக்கிறது என்ற நம்புகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதோர் தொட்டில் கட்டி வேண்டுகின்றனர். திருமணம் கைகூடுகிறது; உடல் நலம் சீராகிறது; கல்வி, வேலைவாய்ப்புக்கு பலன் கிடைக்கிறது. இக்கோவிலின் 67ம் ஆண்டு ஆடித் திருவிழா, இம்மாதம் 14ம் தேதியுடன் துவங்கியது. அன்றைய தினம் கோ பூஜை, சக்தீஸ்வரி மாரியம்மனுக்கு குங்கும காப்பு, அதை தொடர்ந்து மஹா மங்களாரத்தி காண்பிக்கப்பட்டது. நேற்று கோ – பூஜை, யாகம், அபிஷேகம், மஹா மங்களாரத்தி நடந்தது. பின்னர் துவஜஸ்தம்பத்தில் கொடியேற்றப்பட்டது. மாலையில் அம்மனுக்கு தாய் வீட்டு சீர் வரிசையுடன், மஞ்சள் காப்பு கட்டப்பட்டது. இன்று காலையில் புஷ்ப கரகம், பம்பை, உடுக்கையுடன் நாதஸ்வரத்துடன் அம்மன் தேர் பவனி நடக்கிறது. இதன் பின் பக்தி இன்னிசை கச்சேரி, பூ மிதித்தல், கூழ் வார்க்கப்படுகிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் நாதஸ்வர கச்சேரியுடன் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது. நாளை காலையில் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செய்துள்ள விழாக்கமிட்டியார், பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.