பதிவு செய்த நாள்
25
ஜூலை
2024
11:07
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை பணம், தங்கம், வெள்ளி என, காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில், மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது. அந்த வகையில், கடந்த 1ம் தேதி முருகன் கோவில் உண்டியல் திறந்து எண்ணிய போது கோவில் பெண் ஊழியர்கள் இருவர், 1.15 லட்சம் ரூபாய் திருடிச் சென்றனர். அருகில் இருந்த ‘சிசிடிவி’ கேமரா வாயிலாக கண்டுபிடித்து, இருவரிடமும் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின், திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். பெண் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில், மேலும் சில கோவில் ஊழியர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என, வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவில் நிர்வாகம், உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தது. உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபடும் ஆண் ஊழியர்கள், சட்டை, பனியன் அணியக் கூடாது; வேட்டி மற்றும் மேல்துண்டு ஆகியவற்றுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, நேற்று காலை உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது. இதில், ஆண் ஊழியர்கள் உடலில் மேலாடை இல்லாமல் வேட்டியுடன் வந்து காணிக்கையை எண்ணினர். பெண் ஊழியர்கள் வழக்கம் போல் புடவை அணிந்து வந்தனர்.