பதிவு செய்த நாள்
01
ஆக
2024
10:08
கோலார்; சிக்க திருப்பதியில் உள்ள பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணும் போது, பெண் ஒருவர் எழுதிய காதல் கடிதமும் இருந்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. கோலார் மாவட்டம், மாலுாரில் சிக்க திருப்பதி பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், திருமலை திருப்பதி கோவிலுக்கு இணையான பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உண்டியலில் உள்ள பணம் எண்ணப்படும். நேற்று முன்தினம் காலையில் பணம் எண்ணப்பட்டது. கனரா வங்கி ஊழியர்கள், வருவாய் துறை ஊழியர்கள், அப்பகுதி தனியார் பள்ளி மாணவர்கள் பணம் எண்ணினர். உண்டியலில் 50 கிராம் தங்கம், 545 கிராம் வெள்ளி என மொத்தம் 64.46 லட்சம் ரூபாய் வசூலாகியிருந்தது. இது தவிர, காதலி ஒருவர், அவரின் காதலனுக்கு எழுதிய கடிதமும் இருந்தது. பெலகாவியை சேர்ந்த காஞ்சன மாலா எழுதிய கடிதத்தில், ‘ஐ லவ் யூ டியர் கிருஷ்ணா. நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் கண்ணை மூடினாலும், திறந்திருந்தாலும், உன்னை என்னால் பார்க்க முடியும். என்னை போல், உன்னை நேசிப்பவர் இந்த உலகத்தில் யாரும் இல்லை’ என குறிப்பிடப்பட்டிருந்தது.