விநாயகர் முன்னால் நின்று குட்டுகிறோம் அல்லவா! குட்டு என்பது தமிழ்ச்சொல் அல்ல. இந்த கன்னடச் சொல்லுக்கு ரகசியம், மர்மம், புதிர் என்று பொருள். மறைத்து வைத்த விஷயம் வெளிப்படும் போது குட்டு உடைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. வியாசர் பாரதக்கதையைச் சொல்லச்சொல்ல விநாயகர் எழுதினார். அவரது எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத வியாசர், இடையிடையே சிக்கலான ஸ்லோகங்களைச் சொல்லி விநாயகரை யோசனையில் ஆழ்த்தினார். அந்த ஸ்லோகங்களுக்கு பாரத குட்டு என்று பெயர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி அடுத்த ஸ்லோகங்களைச் சொல்ல தன்னைத் தயார்படுத்திக் கொள்வார் வியாசர். விநாயகனே! நான் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்திருக்கலாம். அந்தக் குட்டு (ரகசியம்) உடையாமல், என் தன்மானத்தைக் காப்பாற்று, என்ற பொருளிலும் தலையில் குட்டி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள்.