பதிவு செய்த நாள்
14
செப்
2024
03:09
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்; தெளிவான சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் பொன்னான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். லாபம் அதிகரிக்கும். உங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற ஆரம்பிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து மேம்படும். தெய்வ அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். கௌரவம், பெருமை என்ற நிலை ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். பிரிந்து சென்ற நண்பர்கள் தேடி வந்து உதவி செய்கின்ற நிலை உருவாகும். புதனின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கடனாக கேட்ட பணம் கிடைக்கும். வரவு பல வகையிலும் அதிகரிக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நெருக்கடி விலகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வழக்கு சாதகமாகும். பதவி உயர்வில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ளக்கூடிய மாதம் இது.
சந்திராஷ்டமம்: அக். 13.
அதிர்ஷ்ட நாள்: செப். 20, 21, 29, 30. அக். 2, 3, 11, 12.
பரிகாரம்: திருவல்லீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் கூடும். நலம் உண்டாகும்.
பூசம்: நினைத்த வேலையை முடிப்பதில் உறுதியும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், கேதுவினால் நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபத்தில் முடியும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். இத்தனை நாட்களும் தடைபட்டு வந்த வேலை விறு விறுவென நடக்கும். தொழில் தொடங்குவதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி என ஒரு சிலருக்கு கிடைக்கும். லாப குருவால் உங்களுக்குத் தேவையான வருவாய் வரும். தொழில் வியாபாரம் லாபத்தை நோக்கிச் செல்லும். இருந்தாலும், விரய ஸ்தானத்தில் ஜீவனாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவு செலவுகளில் கவனமாக இருப்பது நல்லது. புதியனவற்றில் முதலீடு செய்வதற்கு முன் நன்றாக தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்பவர்கள் ஒவ்வொன்றையும் தங்கள் நேரடிப் பார்வையில் செய்வது அவசியம். குடும்பத்தில் இருந்த நெருக்கடி ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். மணமாலை சூடும் நேரம் கனிந்து வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சுக்கிரனின் சஞ்சார நிலைகளும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த வரவு வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடை விலகும்.
சந்திராஷ்டமம்: செப். 17. அக். 13, 14.
அதிர்ஷ்ட நாள்: செப். 20, 26, 29. அக். 2, 8, 11, 16.
பரிகாரம்: அச்சிறுபாக்கம் ஆட்சிபுரீஸ்வரரை வழிபட எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உங்களால் அடைய முடியும். கேட்ட பணம் கைக்கு வரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். ஒரு சிலர் வீடு கட்டும் வேலையில் இறங்குவீர். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழிலில் இருந்த தடை விலகும். உற்பத்தி அதிகரிக்கும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். குரு, சூரியன், கேதுவால் உங்கள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு அமையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களின் நிலை உயரும். கோரிக்கை வெற்றியாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசு வழியில் தடைபட்டு வந்த வேலை இக்காலத்தில் நிறைவேறும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமணத்திற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும்.
சந்திராஷ்டமம்: செப். 17, 18. அக். 14.
அதிர்ஷ்ட நாள்: செப். 20, 23, 29. அக். 2, 5, 11.
பரிகாரம்: திருவாலங்காடு வடாரண்யேசுவரரை வழிபட வழக்கு விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.