பதிவு செய்த நாள்
21
நவ
2012
11:11
திருச்சி: திருவண்ணாமலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்ய முயன்ற அருணகிரிநாதருக்கு காட்சி தந்து, "வயலூருக்கு வா என்று அழைத்த முருகன், அவரது நாக்கில் வேலினால் "ஓம் என்றெழுதி, "திருப்புகழ் பாட வரமளித்த தெய்வீக திருத்தலம், திருச்சியை அடுத்த வயலூர் முருகன் கோவில். கோவிலின் எதிரே உள்ள சக்தி தீர்த்தத்தில் அருணகிரிநாதர் தொடர்ந்து நீராடி, தனது தொழுநோய் நீக்கப்பெற்றார் என்பது வரலாறு. இத்தகைய சிறப்புமிக்க வயலூர் முருகன் கோவிலில், பிரசித்திப்பெற்ற கந்தசஷ்டி விழா, தீபாவளியன்று துவங்கி நேற்று முன்தினம் முடிந்தது. கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளில் நடக்கும், தேவசேனா (தெய்வானை)- சுப்ரமணிய ஸ்வாமி திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து, முருகனிடம் மனமுருகி வேண்டிக் கொண்டால், அடுத்த கந்தசஷ்டி திருவிழாவுக்குள் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதுபோன்ற வேண்டிக்கொண்டவர்கள் ஏராளமானோர் திருமணம் கைகூடி சிறப்பான வாழ்வை பெற்றிருக்கின்றனர். இத்தகைய சிறப்புமிக்க, திருக்கல்யாண வைபவம், நேற்று முன்தினம் இரவு, 8 மணிக்கு நடந்தது. திருமணமாகாத இளைஞர், இளம்பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, இரவு, 7 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும், 7.30 மணிக்கு சென்னை இசைக்கல்லூரி மாணவர்கள் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.