பதிவு செய்த நாள்
01
அக்
2024
05:10
உசிலம்பட்டி; உசிலம்பட்டி அருகே மானூத்து பாறைப்பட்டி கிராம மக்கள் புரட்டாசி மாதத்தில் செல்லாண்டியம்மன் கோயில் வழிபாட்டுக்காக மாமிச உணவை தவிர்த்து விட்டு அதற்கு இணையான சத்துக்களுடன் கூடிய கடலைப்புட்டை பாரம்பரியமாக செய்து உண்கின்றனர். உசிலம்பட்டி எழுமலை ரோட்டில் உள்ளது எம்.பாறைப்பட்டி கிராமம். மானாவாரி நிலங்கள் உள்ள பகுதியான இங்கு கேழ்வரகு, கம்பு, நிலக்கடலை முதலியவை பிரதான விவசாயமாக உள்ளது. கிராமத்தின் அருகே மலையடிவாரத்தில் உள்ள செல்லாண்டியம்மனை ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வழிபடுகின்றனர். இதன் காரணமாக புரட்டாசி மாதம் மட்டும் மாமிச உணவுகளை தவிர்த்து சைவ உணவுக்கு மாறுகின்றனர். தொடர்ந்து வரும் மழைக்காலத்தில் வயல்வெளியில் பணிகள் செய்ய வேண்டியுள்ளதால், உடலுக்கு வலு சேர்க்கும் வகையில் கேப்பைமாவில் செய்த புட்டு, வறுத்த நிலக்கடலை, கருப்பட்டி ஆகியவற்றை சேர்த்து இடித்து கடலைப்புட்டு தயாரித்து வைத்து புலால் உணவிற்கு பதிலாக இதனை பயன்படுத்துகின்றனர்.
செல்வி, எம்.பாறைப்பட்டி: கிராமத்தில் 300 குடும்பத்தினர்கள் உள்ளனர். காலம் காலமாக புரட்டாசி மாதத்தில் செல்லாண்டியம்மன் வழிபாட்டுக்காக கறியை உணவில் சேர்க்கமாட்டோம் . அதற்கு பதிலாக இந்த கடலைப்புட்டு செய்து சேர்த்து கொள்வோம். நிலக்கடலை பருப்பை வறுத்து தோல் நீக்கி எடுத்து, உரலில் இடித்து ஒன்றிரண்டாக இடிபட்டவுடன் தேவையான அளவு கருப்பட்டி சேர்த்து இடிப்போம். அதே நேரத்தில் கேழ்வரகு மாவினை சலித்து புட்டாக அவித்து எடுத்து நிலக்கடலை, கருப்பட்டியுடன் சூடாக சேர்த்து இடிப்போம். மூன்றும் சேர்ந்து இடிக்கும்போது உலக்கையை இறுக்கிப் பிடிக்கும். அதனால் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து இந்த பணியில் ஈடுபடுவோம். பருப்பில் இருக்கும் எண்ணெய் வெளியேறி புட்டு, கருப்பட்டியுடன் கலந்து தனியான மணமும், ருசியும் தரும். இது மட்டுமல்லாமல் உடலுக்கு நல்ல பலம் தரும் உணவாக இது உள்ளது என்றார்.