மகாளய பட்ச அமாவாசை தர்ப்பணம்; காவிரி சங்கமத்துறையில் குவிந்த மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2024 09:10
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் கடலில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
இறந்த தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது அவசியம். முன்னோர் இறந்த தேதி, ஆடி, தை அமாவாசையில் வீட்டிலோ அல்லது நதிக்கரைகள், சமுத்திர கரைகளில் திதி கொடுப்பதன் மூலம் அவர்களது ஆசி கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு முன்னோர்களுக்கு திதி கொடுக்காதவர்கள் எமன் அனுமதியோடு நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்ளும் நாளான புரட்டாசி மாத மகாளயபட்ச அமாவாசையில் அவசியம் திதி கொடுத்தால் செல்வம் பெருகி குடும்ப நிலை உயரும், குழந்தைகள் கல்வி பெற்று பெருவாழ்வு பெறுவர் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மகாளய பட்ச அமாவாசையான இன்று மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காவேரி சங்கமத் துறையில் ஏராளமானோர் புனித நீராடி வேத விற்பன்னர்கள் மற்றும் ஆச்சாரியார்கள் வழிகாட்டுதலின்படி தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து அரிசி, காய்கறிகள், தானியங்களை தானமாக கொடுத்து வழிபாடு நடத்தினர். இதுபோல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் காலையிலேயே திரண்ட மக்கள் முக்குளத்தில் நீராடி ருத்ரபாதத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.