திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம்!; அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
பதிவு செய்த நாள்
24
அக் 2024 02:10
மதுரை; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கந்த சஷ்டி விழா. இந்த ஆண்டுக்கான சஷ்டி விழா, நவ., 2ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கிறது. 7ம் தேதி நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியில், 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சஷ்டி விழாவின் போது, விரைவு தரிசன கட்டணமாக, பக்தர்களிடம் இருந்து, 1000 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த பா.ராம்குமார் ஆதித்தன் என்ற பக்தர்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும். விழாவின் போது தினமும் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். சூரசம்ஹாரம் அன்று 5 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வருவார்கள். இக்கோவிலில் சாதாரண நாட்களில் கட்டணமின்றி தரிசனம் மற்றும் விரைவு தரிசனமாக நபருக்கு ரூ. 100 கட்டணமாக வசூல் செய்கிறார்கள். கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் கட்டணமின்றி தரிசனம் மற்றும் விரைவு தரிசனம் கட்டணமாக ரூ. 200 நிர்ணயம் செய்துள்ளார்கள். கடந்த 2023ம் ஆண்டு கந்த சஷ்டியின் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. விரைவு வரிசைக் கட்டணமாக நபருக்கு ரூ. 1,000 வசூல் செய்தனர். பக்தர்கள் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். எனவே, கந்த சஷ்டி விழாவின் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடை செய்யவும், அது தொடர்பான 2018-ம் ஆண்டு உத்தரவை ரத்து செய்வதுடன், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க திருப்பதியில் உள்ளவாறு விஸ்வரூபம் தரிசனம், அபிஷேகம் தரிசனம், கட்டணமில்லாத தரிசனம், விரைவு தரிசனங்களுக்கு ஆதார் எண் அடிப்படையில் தரிசன நேரம் குறிப்பிட்டு முன் கூட்டியே டோக்கன் அளிக்கவும், டோக்கன் அளிக்க தனி கவுன்டர்கள் திறக்கவும் உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் இன்று (அக்,24) விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு தொடர்பாக 2 வாரத்தில் அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டம் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஓத்திவைத்தனர்.
|