ராமர் ஆட்சியில், அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். ஏழை என்று ஒருவரும் இல்லை. இதனைக் கம்பர், ""அயோத்தியில் எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே இல்லாருமில்லை உடையார்களுமில்லை என்று பாடினார். இதை தெரிவிக்கும் கதை ஒன்றும் உண்டு. அயோத்தியில் ஒரு நவரத்தின வியாபாரி இருந்தார். அவரது மகள், தன் திருமணத்திற்கு வருமாறு சீதைக்கு அழைப்பு விடுத்தாள். சம்மதித்த சீதைக்கு, முத்துமாலை ஒன்றை வழங்கினாள். அவளிடம் சீதை, ""என்னிடம் நகை ஏராளமாக இருக்கின்றன. யாராவது ஏழைக்கு கொடு, என்று வாங்க மறுத்தாள். அரைமனதுடன் வெளியேறிய அந்தப்பெண், கொண்டு வந்ததை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மனம் இல்லாமல் அரண்மனை வாசலில் போட்டுச் சென்றாள். பிறர் பொருள் மீது ஆசையில்லாத அயோத்தி மக்கள் யாருக்கும், அந்த மாலையை எடுக்கும் எண்ணம் வரவில்லை. அது மண்ணுக்குள் புதைந்து போனது. எல்லா மக்களும் செல்வந்தர்களாக இருந்ததை உணர்த்தும் நிகழ்ச்சி இது.