பதிவு செய்த நாள்
05
நவ
2024
11:11
முருகனுக்கு செவ்வாய் கிழமை சஷ்டியில் விரதம் இருப்பதால் சகல நன்மையும் கிடைக்கும். முருகனுக்கென எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் அதில் சிறந்தது சஷ்டி. இந்த சஷ்டி நாட்களில் முருகனுக்காக விரதமிருந்து மனமுருகி வழிபட்டால் நமக்கு வேண்டியதை கொடுத்து அருள்வான் முருகன். ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானது. இன்று முருகனின் தவக்கோலத்தை தரிசித்தல் சிறப்பு. இன்று 4 ஜீவராசிகளுக்காவது உணவளிக்க மலை போல் இருக்கும் கடனும் பனி போல் குறையும்.
விநாயகரை வழிபட சிறப்பானது சதுர்த்தி தினம். மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு,அப்பனே! விநாயகனே! தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர். எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர். விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். சதுர்த்திநாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்.விநாயகரை அருகம்புல் மாலை சாத்தி வழிபட அனைத்தும் கிடைக்கும்.