பதிவு செய்த நாள்
08
நவ
2024
10:11
சென்னை; சென்னையில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று, தாயாரை தரிசனம் செய்தார். காலையில், மேற்கு மாம்பலம், கிருபாசங்கரி தெருவில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில், ஸ்ரீசாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தை, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் நடத்தி வைத்தார்.
சென்னையில், அக்., 28 முதல் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள, சிருங்கேரி சன்னிதானம், கோவில் தரிசனம், கிளை மடங்களுக்கு விஜயம், கோவில் கும்பாபிஷேகம், அருளுரை என, சென்னை மாநகர் மற்றும் புறநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று காலை, மேற்கு மாம்பலம் கிருபாசங்கரி தெருவில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில், ஸ்ரீரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீநவநீதகிருஷ்ணர், ஸ்ரீசாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். மூன்று சன்னிதிகளின் கோபுரங்களிலும் புனிதநீர் ஊற்றி பூஜைகள் செய்தார். பா.ஜ., மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்டோர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். கடந்த 1982 ஜனவரி 28ல், இந்த கோவில் கும்பாபிஷேகத்தை, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் அன்றைய பீடாதிபதி ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகள் நடத்தி வைத்தார். அதன்பின், 1995ல் இக்கோவில் கும்பாபிஷேகத்தை, மடத்தின் இன்றைய பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகாசுவாமிகள் நடத்தி வைத்தார். தற்போது, புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீசாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தை, ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் நடத்தி வைத்துள்ளதாக, மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தர்மம்: நேற்றிரவு 7:00 மணியளவில், தி.நகர் கிரி சாலையில் உள்ள ஸ்ரீபிள்ளையார், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் கோவில்களில், சிருங்கேரி சன்னிதானம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் இரவு 7:35 மணியளவில், வெங்கட்நாராயணா சாலையில் உள்ள சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரம் வருகை தந்தார். அவருக்கு துாளி பாத பூஜை நடந்தது. பாரதி வித்யாஸ்ரம் சார்பில் தமிழ், சமஸ்கிருதத்தில் வரவேற்பு மடல்கள் வாசிக்கப்பட்டன. நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் சன்னிதானத்திடம் ஆசி பெற்றனர்.
அதைத் தொடர்ந்து சன்னிதானம் வழங்கிய அருளுரை: நாம் அனைவரும் சனாதன வைதீக தர்மத்தை பின்பற்றும் பரம்பரையில் பிறந்திருக்கிறோம். பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வை நடத்த வேண்டிய கடமை உள்ளது. அதுபோல விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கான வாழ்வை கடவுளே ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஆன்மிக வாழ்க்கை: வாழ்வை நடத்தினால் மட்டும் போதும் என்று நினைத்தால் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இது தர்மம், இது அதர்மம் என்று மனிதனுக்குதான் சொல்லிக் கொடுக்க முடியும். விலங்குகளுக்கு சொன்னாலும் புரியாது. எனவே, சாஸ்திரங்கள் காட்டும் தர்ம வழியில் வாழ்வது, அதாவது ஆன்மிக வாழ்க்கை மனிதனின் கடமை. நாம் சேர்க்கும் செல்வங்களை நாம் மேல் உலகம் செல்லும்போது கொண்டு செல்ல முடியாது. நாம் செய்யும் புண்ணியங்கள் தான் கடைசிவரை நம்மிடம் இருக்கும். இதுதான் உண்மை. சத்தியத்திற்கு தான் எப்போதும் வெற்றி கிடைக்கும். ஸ்ரீஆதிசங்கரர் அருளிய அத்வைத தத்துவம் உண்மையானதத்துவம். அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பலன் இல்லாத செயல்களை செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே, சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட அனைத்திற்கும் கண்டிப்பாக ஏதாவது ஒரு பலன் இருக்கும். எனவே, ஆன்மிக தத்துவங்களை புரிந்து கொள்ள ஆழமாகப் படிக்க வேண்டும். இவ்வாறு சிருங்கேரி சன்னிதானம் அருளுரை வழங்கினார்.
விஜய யாத்திரை --– நிகழ்ச்சி விபரம்:
இன்று – 8.11.2024 – வெள்ளிக்கிழமை காலை 9:00 - தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில் ஸ்ரீசாரதம்பாள் கோவில் கும்பாபிஷேகம்காலை 10:45 - பக்தர்கள் தரிசனம், பாத பூஜைமாலை 5:00 - மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லத்தில் குருத்ராய ஸம்ஸ்மரணம் - சிருங்கேரி சன்னிதானத்தின் அருளுரைஇரவு 7:00 - ஸ்ரீஆதிசங்கரர் குறித்து விசாகா ஹரியின் இசை சொற்பொழிவுஇரவு 8:30 - ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வரர் பூஜை