பதிவு செய்த நாள்
15
நவ
2024
12:11
பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நவ.17., ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், காந்தி ரோடு, பெரிய கடைவீதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. கடந்த ஆண்டு வேணுகோபால சுவாமி கோயிலுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. அதன் பின் சில மாதங்களுக்கு முன் வேணுகோபால சுவாமி கோயிலில் பாலாலய பூஜை நடைபெற்றது. புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த உடன் அக்.23, கருவறை பாலாலயம் நடைபெற்றது. அதன் பின் கும்பாபிஷேகம் நடைபெற முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நவ.4ல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நாளை (நவ., 16) முதற்கால வேள்வி மங்கல இசையுடன், மாலை 5:00 மணிக்கு துவங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து குரு வணக்கம், இறைவழிபாடு, புனித நீர் வழிபாடு, காப்பு அணிவித்தல், பூமி வழிபாடு, வேள்வி சாலை புகுதல், வேள்வி வழிபாடு ஆகியவற்றுடன் முதல் கால வேள்வி நடைபெறும். அதன் பின் (நவ.,17) ஞாயிறு காலை 7:00 மணிக்கு நல் மங்கல இசை உடன் திருமகள் வழிபாடு, திருவிளக்கு ஏற்றுதல், வேண்டுதல் விண்ணப்பம், கண் திறத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் இரண்டாம் கால வேள்வி நடைபெறும். யாக சாலையில் வைக்கப்பட்ட திருக்குடங்கள் மூலம் திருச்சி திருவெள்ளறை கோபாலகிருஷ்ண பட்டர் தலைமையில், காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான விமான, கலச கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக ஏற்பாட்டினை இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.