மைசூரின், கெல்லஹள்ளி கிராமத்தில் பலரும் சபரிமலைக்கு சென்று அய்யப்ப சுவாமியை தரிசிக்க மாலை போட்டுள்ளனர். நேற்று முன்தினம் மண்டல பூஜை நடத்தினர். கிராமத்தின் மூகு மாரம்மா கோவில் வளாகத்தில் கணபதியை பூஜித்து, மண்டல பூஜையை துவக்கினர். மதியம் 12:00 மணிக்கு, அன்னதானம் ஏற்பாடு செய்தனர். சுற்றுப்புற கிராமங்களின் 80,00 பேருக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 8:00 மணிக்கு அய்யப்ப சுவாமி, கணபதி, சுப்ரமண்யர், மாளிகை புரத்தம்மன், விஷ்ணுவின் போட்டோக்கள் வைத்து, அய்யப்ப சுவாமியின் 18 படிகள் அமைத்து பூஜை செய்தனர். இரவு 11:00 மணிக்கு, கொதிக்கும் எண்ணெயில் கை விட்டு அதிரசங்களை எடுக்கும் நிகழ்வு நடந்தது. அய்யப்ப பக்தர்கள் கொதிக்கும் எண்ணெயில் கை விட்டு அதிரசத்தை எடுத்தனர். அதன்பின் தீ மிதி திருவிழா நடந்தது. மாலை அணிந்தவர்கள், பக்தியுடன் தீ மிதித்தனர். நேற்று அதிகாலை 3:00 மணி வரை, பூஜைகள் நடந்தன.