பதிவு செய்த நாள்
30
நவ
2024
11:11
சென்னை; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தையொட்டி, மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் கவசம் மூன்று நாட்கள் திறக்கப்பட்டு, புணுகு, சாம்பிராணி, தைலாபிஷேகம் நடக்கும். அதன்படி, வரும் 14ம் தேதி மாலை ஆதிபுரீஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டு உள்ள தங்க முலாம் பூசிய கவசம் திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து, 15, 16 ஆகிய தேதிகளில், ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும். மூன்று நாட்களும் புணுகு, சாம்பிராணி, தைலாபிஷேகம் நடக்கும். பின், 16ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, அர்த்தஜாம பூஜைக்கு பின், மீண்டும் கவசம் அணிவிக்கப்படும்.
ஆண்டுக்கொரு முறை நடக்கும் அதிசய வைபவத்தை காண, சென்னை மட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் இருந்தும், லட்சக்கணக்கானோர் குவிவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுள் குறித்து, கோவில் உதவி கமிஷனர் நற்சோணை தலைமையில், போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதுகுறித்து, உதவி கமிஷனர் நற்சோணை கூறியதாவது: ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில், 32 ‘சிசிடிவி’ கேமராக்கள் உள்ளன. சன்னிதி தெரு, மாடவீதிகளிலும், தற்காலிகமாக ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. வரிசையில் நிற்கும் பக்தர்கள், மழையில் நனையாமல் இருக்க, மேற்கூரை அமைத்தல், குடிநீர் வசதி, இ – டாய்லெட், முதியவர்கள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு சிறப்பு வசதி, ஆறு வீல் சேர்கள் உள்ளன. வரிசையை ஒழுங்குபடுத்தும் தன்னார்வலர்கள் மற்றும் போலீசார், பக்தர்களிடம் இன்முகத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். வரிசையில் குளறுபடி, சிபாரிசு பிரச்னைகள் இருக்க கூடாது என்பதால், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.