மாமல்லபுரம்; மாமல்லபுரம் சிற்பங்களில் படிந்திருந்த மாசுக்கள், தொடர் மழையில் அகன்றதால், சிற்பங்கள் பளிச்சிடுகின்றன.
மாமல்லபுரத்தில், பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, மற்ற குடவரைகள் ஆகிய பாறை சிற்பங்களை, சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். தொல்லியல் துறையினர், இவற்றை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். காற்றில் பரவும் துாசி, வாகன புகை, பறவைகளின் எச்சம் உள்ளிட்டவை படிந்து, சிற்பங்கள் பொலிவிழக்கும். இவ்வாறு, மாசுக்கள் அதிக அளவில் படியும் போது, அத்துறையினர் சுத்திகரிக்கப்பட்ட நீர், பிரத்யேக நுரைக்கும் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி சிற்பங்களை கழுவி துாய்மைப்படுத்துவர். தற்போது வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் ஆகிய காரணங்களால், தொடர்ந்து கனமழை பெய்தது. இதில், திறந்தவெளி பகுதியிலுள்ள சிற்பங்களில் படிந்திருந்த மாசுக்கள் மழைநீரால் அகன்று, சிற்பங்கள் தற்போது பளிச்சிடுகின்றன.