பதிவு செய்த நாள்
02
டிச
2024
02:12
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்தில் அரசியல் மற்றும் வெறுப்பு கருத்துகளை பேசுவதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோவிலில் வழிபட ஆந்திராவிலிருந்து மட்டுமின்றி, மற்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இதில், அரசியல் மற்றும் திரைப் பிரபலங்களும் அடங்குவர். அவ்வாறு வரும் பிரபலங்கள், தரிசனத்துக்கு பின் கோவில் வளாகத்தில், செய்தியாளர்களை சந்தித்து பேசுவர். சமீபத்தில், இதுபோல் பிரபலங்கள் அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் இதுபோன்ற பேட்டி அளிப்போர், அரசியல் மற்றும் வெறுப்பு கருத்துகளை கூற தடை விதிக்கப்பட்டுள்ளதாக, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மிக தலத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை தடுக்க, ஏற்கனவே இந்த விதிமுறை அமலில் உள்ள நிலையில், பலர் இதை பின்பற்றுவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தடை உத்தரவை, அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.