பதிவு செய்த நாள்
02
டிச
2024
03:12
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூரில், சந்திரமேக தடாகம் என்ற ஏரிக்கரை அருகில் காமாட்சி அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. சிவன் அக்னி வடிவானவர் என்பதால், சுவாமியை குளிர்விக்கும் வகையில், இந்த ஏரி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பழமையான இக்கோவில் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, நித்யகால பூஜை, பிரதோஷம், பவுர்ணமி, மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இக்கோவிலுக்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், ஏரிக்கரை வழியாக செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலத்தில் ஏரிக்கரை சாலை சகதியாக இருப்பதால், இக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கோவில் சுவரில் ஆங்காங்கே செடிகள் முளைத்து சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, பழமை மாறாமல் இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தவும், இக்கோவிலுக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.