பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழாவையொட்டி, 52 கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.இதற்காக, கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜகோபுரம் பாலாலயம் நடந்தது. கடந்த, 14ம் தேதி மூலஸ்தானம் மற்றும் மற்ற சன்னதி சுவாமிகளுக்கு பாலாலயம் நடந்தது.இதைத்தொடர்ந்து, திருப்பணிகள் நடைபெறுவதுடன், யாக சாலையில் ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த, 6ம் தேதி வேதபாராயணத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரத்துக்கு நான்கு அடியில் ஏழு கலசங்கள்; கருவறை விமானத்துக்கு மூன்று கலசங்கள்; திசை கோபுரங்களுக்கு மூன்று அடியில், 10 கலசங்கள்; பரிவார மூர்த்திகளுக்கு ஒரு அடியில், 32 கலசங்கள், என, மொத்தம், 52 கலசங்கள் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டன. அவை, நா.மூ., சுங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தயார்படுத்தப்பட்டன.இந்நிலையில், நேற்று கும்பாபிேஷக விழாவையொட்டி கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, கோபுரங்களில், கலசங்கள் பொருத்தும் பணிகள் நடைபெறுகிறது. அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், அறங்காவலர்கள் திருமுருகன், மருதமுத்து, மஞ்சுளாதேவி மற்றும் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். வரும், 12ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.