சபரிமலையில் பரவும் காய்ச்சல்; ஆயுர்வேத மருத்துவமனை விரிவாக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2024 11:12
சபரிமலை; சபரிமலையில் ஊழியர்கள் மத்தியில் காய்ச்சல் பரவுகிறது. சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் கேரள அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவமனைகளில் இதுவரை 68,000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். காய்ச்சல், ஜலதோஷம், சளி போன்றவற்றால் ஊழியர்களும், பக்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவில் குளிர், காலையில் வெயில் என காலநிலை மாறி மாறி வருவதால் இப்பிரச்னை ஏற்படுவதாக சன்னிதானம் மருத்துவ அதிகாரி அனீஷ் கே சோமன் கூறினார். கடந்த 22 நாட்களில் அலோபதி மருத்துவமனையில் 28,839 பேரும் ஆயுர்வேத மருத்துவமனையில் 25 ஆயிரத்து 60 பேரும் ஓமியோ மருத்துவமனையில் 1107 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். பம்பையில் அனைத்து மருத்துவமனைகளிலும் சேர்த்து 12591 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். சன்னிதானம் ஆயுர்வேத மருத்துவமனைக்கான வசதியை விரிவு படுத்தி அதற்கான கட்டடத்தை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த் நேற்று திறந்து வைத்தார். பஞ்சகர்மா சிகிச்சையுடன் மசாஜிங், ஸ்டீம் யூனிட்டுகள் போன்றவை இங்கு நிறுவப்பட்டுள்ளது.