சபரிமலை; பம்பையில் தினமும் 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரையிலான இளநீர் விற்பனை ஆகிறது. இளநீர் அனைத்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படுகிறது.
பம்பையில் இருந்து மலை ஏறும் பக்தர்களையும், சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு இறங்கும் பக்தர்களையும் இலக்காகக் கொண்டு அடுத்தடுத்து இரண்டு இளநீர் கடைகள் செயல்படுகிறது. இரவு பகல் இடைவெளி இல்லாமல் 20 பேர் இளநீர் வெட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். ஒரு இளநீரின் விலை 40 ரூபாய்.நாள் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெறுகிறது. ஒரு பந்தலுக்கு 80 லட்சம் மற்றொரு பந்தலுக்கு 95 லட்சம் ரூபாயில் குத்தகை கட்டணம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கம்பம், தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டுவரப்படுகிறது. ஒரு லோடில் 5500 இளநீர் கொண்டுவர முடியும். தினமும் ஐந்து லோடு இளநீர் வருகிறது.கூட்டம் அதிகரிக்கும்போது எட்டு லாரி இளநீரும் வரும்.தேனி மாவட்டம் ஸ்ரீலையம்பட்டியை சேர்ந்த பாண்டியன் என்பவர் இந்த இளநீர் கடைகளை குத்தகை அடிப்படையில் நடத்தி வருகிறார். சபரிமலை சீசனில் பம்பை மட்டுமல்லாமல் சபரிமலை பாதைகளிலும் இளநீர் விற்பனை சூடு பிடிப்பதால் தமிழ்நாட்டில் இளநீர் விலையும் அதிகரிக்கிறது என்று கூறும் பாண்டியன், சபரிமலையின் சீசனின் லாபம் தமிழக விவசாயிகளுக்கும் கிடைக்கிறது என்றார்.