பதிவு செய்த நாள்
10
ஜன
2025
08:01
சென்னை; பிரசித்தி பெற்ற பல்லாவரம் திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர், மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, பலவண்ண மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக புறப்பட்டு சொர்க்கவாசல் அடைந்தார். அங்கு பெருமாள் மற்றும் தாயாருக்கு தீபாராதனை நடைபெற்றது. ‘‘கோவிந்தா... கோவிந்தா’’... என்ற கோஷம் முழங்க, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இவ்விழாவில் சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பு விழாவில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன கவுண்டர்கள் திறக்கப்பட்டது. இதன்மூலம் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வழிவகை செய்தனர். பல்லாவரம், சங்கர் நகர் மற்றும் குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.