பதிவு செய்த நாள்
11
ஜன
2025
01:01
காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்ய தேசங்களில், 47வது திவ்யதேசமான காஞ்சிபுரம் அழகிய சிங்கபெருமாள் கோவிலுக்கு வெளியே உள்ள ஹேமசரஸ் என அழைக்கப்படும் தெப்பக்குளம், 15 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டு, தெப்போற்சவம் நடந்து வந்தது.
அதன்பின் முறையான பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்து குளம் சீரழிந்ததால் தெப்போற்சவம் நடத்தப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையின்போது, குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தவறி குளத்திற்குள் விழாமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டது. இருப்பினும், குளத்தை துார்வாரி, சுற்றுச்சுவர் அமைத்து சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கோவில் குளத்தை சீரமைக்க தமிழக அரசு 57.20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. கோவில் சீரமைப்பு பணி கடந்தாண்டு ஜூலையில் துவங்கியது. கோவில் தெப்பக்குளம் முழுமையாக துார்வாரப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹிந்து அறநிலையத் துறை அதிகாரி கூறுகையில், ‘குளம் சீரமைப்பு பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. மேலும், குளத்திற்கு இரும்பு கிரீல் கேட் மற்றும் சுற்றுச்சுவரில் இரும்பு கிரீல் பொருத்தும் பணி முடிக்க வேண்டியுள்ளது. இப்பணி ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு குளம் பயன்பாட்டிற்கு வரும்’ என்றார்.