பதிவு செய்த நாள்
11
ஜன
2025
04:01
கடகம்; புனர்பூசம் 4ம் பாதம்: பிறர் நலனில் அக்கறை கொண்டு மற்றவருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் அதிர்ஷ்டமான மாதம். குரு பகவான் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் வக்ரம் அடைந்திருந்தாலும், 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது எடுக்கும் முயற்சிகளுக்கு எல்லாம் வெற்றியாக்குவார். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். செயல்களில் துணிவு ஏற்படும். எடுத்த வேலைகளை முடித்து விடக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தினர் ஆலோசனை உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். உடன் பிறந்தவர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். மாதத்தின் முதல், கடைசி வாரத்திலும் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். நேற்றைய கனவு நனவாகும். பணவரவு அதிகரிக்கும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழில் முன்னேற்றமடையும். பாக்ய ஸ்தான ராகுவால் பெரியோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். இஷ்ட தெய்வத்தின் அருள் உண்டு. அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரித்து வருவதால் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் நலனில் சின்னச் சின்ன சங்கடம் வந்து செல்லும். எதிரிகளால் உங்கள் செல்வாக்கு அந்தஸ்துக்கு சில சோதனை உண்டாகும். அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். சப்தம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்பொழுதும் வேலையின் மீதான சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும். அதனால் உங்கள் மீதான அக்கறையே உங்களுக்கு இல்லாமல் போகும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை கூடும். குடும்பத்தில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். விவசாயிகள் விளைச்சலில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.
சந்திராஷ்டமம்: ஜன. 30.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 20, 21, 29. பிப். 2, 3, 11, 12.
பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
பூசம்: மனம் சொல்லும்படி வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திரநாதன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேளையிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான செயல் உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கும். எதிரிகளால் சின்னச் சின்ன பிரச்னைகளை சந்திக்க நேரும். அது உங்களுடைய அந்தஸ்திற்கு கேள்விக் குறியாக மாறும். இந்த நேரத்தில் மாதம் முழுவதும் லாபாதிபதியான சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவு இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை அமையும். தம்பதிக்குள் இணக்கம் கூடும். எல்லா பிரச்னைகளையும் ஒன்றாக சேர்ந்து எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வழக்கத்தை விட இந்த மாதம் கூடுதல் அக்கறை தேவை. உடன் பணிபுரிபவர்களுடன் வாக்குவாதம், பிரச்னைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். சப்தம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வேலைபளு கூடும். ஒரு சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பணியின் காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று வர வேண்டிய நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும். பல வகையிலும் அலைச்சல் அதிகரிக்கும். இந்த நேரத்தில் வெளிநாட்டு தொடர்புகள் அந்நியரால் உங்களுக்கு உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீட்டில் குடியேறும் பாக்கியம் உண்டாகும். நேற்றைய கனவுகள் நனவாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயி கவனமுடன் செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 31.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 20, 26, 29. பிப். 2, 8, 11.
பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
ஆயில்யம்: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் முன்னேற்றமான மாதம். மாதத்தின் முதல் வாரத்திலும் கடைசி வாரத்திலும் புதபகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் வேலை எளிதாக நடக்கும். வரவேண்டிய பணம் வரும். இடம் விற்பது வாங்குவது போன்ற வேலை லாபம் தரும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தம்பதிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி குறையும். இருந்தாலும், சப்தம ஸ்தானத்தில் சூரியனும், அஷ்டம ஸ்தானத்தில் சனியும் சஞ்சரித்து வருவதால் அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் நிலையும் ஒரு நேரம் இருப்பது போல் மறு நேரம் இல்லாமல் போகும். நேரத்திற்கு உணவு துாக்கம் போன்றவற்றைக் கடைபிடிப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் பதற்றப்படாமல் செயல்படுவது அவசியம். இறை வழிபாடு இந்த மாதத்தில் உங்களுக்கு அதிகபட்சமான நன்மை ஏற்படும். பெரியோரின் ஆதரவு கிடைத்து அதனால் சங்கடங்களில் இருந்து வெளியில் வர முடியும். நினைத்திருந்த வேலை நடக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். புதிய முயற்சிகளில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு மாதத்தின் கடைசியில் படிப்பில் அக்கறை உண்டாகும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: பிப். 1.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 20, 23, 29. பிப். 2, 5, 11.
பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.