பதிவு செய்த நாள்
03
பிப்
2025
10:02
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகின்றது.
ஆதியில், பிரம்ம தேவர் அனைத்து உலகங்களையும், உயிரினங்களையும் படைத்த பின்னரும், அவருக்கு ஏதோ குறை இருப்பது போலவே தோன்றியது. அனைத்துப் படைப்புகளும் அமைதியாக, மௌனமாக இருந்தன. இது குறித்து சிந்தித்தவாறே பிரம்ம தேவர் தம் கமண்டலத்தை எடுத்தார். அப்போது அதிலிருந்து சில துளிகள் கீழே சிந்தின. அவை ஒருங்கிணைந்து, ஒரு பெரும் சக்தியாக, மிகுந்த பிரகாசத்துடன் உருவெடுத்தன. ஒரு அழகிய பெண், நான்கு திருக்கரங்களுடன் கூடிய உருவில் பிரம்ம தேவர் முன் தோன்றினாள்.. சுவடிகள், ஸ்படிக மாலை, வீணை முதலியவற்றைத் தாங்கியவளாகத் தோன்றிய அந்த மஹாசக்தி, தன் வீணையை மீட்டி, தேவகானம் இசைக்கத் தொடங்கினாள். ஞான ஒளிப் பிழம்பான அம்பிகை, கானம் இசைக்கத் தொடங்கியவுடன், பிரம்ம தேவரின் படைப்புகள், ஒசை நயம் பெற்றன.. ஆறுகள் சலசலக்கும் ஒலியுடன் ஓடத் துவங்கின. கடல் பெருமுழக்கத்தோடு அலைகளைப் பிரசவித்தது.. காற்று பெருத்த ஓசையுடனும், முணுமுணுக்கும் ஒலியுடனும் வீசியது.
மனிதர்கள் மொழியறிவு பெற்றனர். பிரம்மதேவர் மகிழ்ந்தார்.வாக்வாதினி, வாகீசுவரி, பகவதி என்றெல்லாம் அம்பிகையைப் போற்றித் துதித்தார். இவ்வாறு சரஸ்வதி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி நாள் என கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞானம் மற்றும் அறிவு சார் கலைகளில் முன்னேற்றம் கிடைப்பதுடன், உயர்நிலைகளை அடைதலும் கிட்டும் என்பது நம்பிக்கை. வட மாநிலங்களில் குறிப்பாக, மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற இடங்களில் வசந்த பஞ்சமி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
பஞ்சாப், காஷ்மீா், அசாம் மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலா் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. மஞ்சள் ஆடை அணிந்துதான் மக்களும் பூஜை செய்கின்றனா். மஞ்சள் பிள்ளையாா் வைத்து வழிபட்டுப் பின்னா் தேவிக்கு மஞ்சள் நிறத்திலேயே இனிப்பு வகைகள் தயாாிக்கப்பட்டு நிவேதனம் செய்யப்படுகின்றன. மஞ்சள் நிற சேலைகள், மஞ்சள் நிற துப்பட்டாக்கள், ஜாிகை மற்றும் கோட்டா அலங்கார ஆடைகளைப் பெண்கள் அணிவாா்கள். எங்கு பாா்த்தாலும் மங்களகரமாக மஞ்சள் வண்ணம் தான் கொலுவீற்றிருக்கும்.