பதிவு செய்த நாள்
04
பிப்
2025
11:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஐந்து பேருக்கு மேல் கூட்டமாக வரக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பரங்குன்றம் பகுதி உச்சகட்ட பரபரப்பில் உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் இன்று கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த நிலையில் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே அசாதாரண சூழ்நிலை நிலவ கூடாது என்பதற்காக மதுரை மாவட்டத்தில் நேற்றும் இன்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 4000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் இந்து அமைப்பை சார்ந்த கட்சி கொடிகளோ அல்லது பயன்கள் மூலமாகவோ வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதை மீறி வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருப்பரங்குன்றத்தை சுற்றி மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் நுழையும் இடத்திலிருந்து கோவில் வாசல் வரை ஆறு கட்டமாக தடுப்புகள் அமைத்து அனைத்து வாகனங்களுக்கும் பலத்த சோதனை பின்னரே அனுமதி இந்து அமைப்புகள் நடத்தக்கூடிய போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் இது போன்ற போராட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4000 மேற்பட்ட காவல்துறையினர் குறிப்பு மாவட்ட எல்லை பகுதிகளில் ஆங்காங்கே காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர்.
மேலும் திருப்பரங்குன்றத்தில் உள்ள தங்கு விடுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். தென்மண்டல ஐஜி மற்றும் மாநகர காவல் ஆணையர் தலைமையில் 9 காவல்துறை கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு பணிகளை கண்காணித்த வருகிறார். தமிழக முழுவதும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் இன்று திருப்பரங்குன்றத்தில் கூடுவதற்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில் இந்து அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆங்காங்கே வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைப்பு - திருப்பரங்குன்றத்தில் சந்தேகத்துக்குரிய நபர்கள் கூடினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.
முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மட்டும் எப்போதும் வரும் முக்கிய வீதியில் வராமல் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிலும் சந்தேகத்திற்குரிய வகையில் ஐந்து பேருக்கு மேல் கூட்டமாக வரக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் திருப்பரங்குன்றம் பகுதி உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. கோவிலை சுற்றி பூக்கடைகள் மற்றும் டீக்கடைகள் மட்டும் செயல்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உணவகங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு மலை மீது சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இதற்காக மலைக்கு செல்லும் இரு பாதைகளில் காவல்துறை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. இன்று ஒரு நாள் மலை மீது சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.