பதிவு செய்த நாள்
10
பிப்
2025
11:02
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புனித நீராடி வழிபாடு செய்தார்.
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. இதுவரை 43 கோடிபேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். வரும் 26ம் தேதி வரை நடக்கும் இந்நிகழ்வில் பங்கேற்க இன்னும் பலர் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரை நோக்கி படையெடுத்தனர். இதனால், அந்நகரை நோக்கி செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது 300 கி.மீ., தூரம் வரை நீண்டதாக பக்தர்கள் கூறுகின்றனர்.இதனையடுத்து, பல மாவட்டங்களில் போலீசார், பக்தர்கள் செல்லும் வாகனங்களை வேறு பாதையில் திருப்பிவிட்டனர். அதுவும் முடியாத காரணத்தினால், வாகனங்களை தடுத்து நிறுத்தினர். மஹா கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக பிரயாக்ராஜ் நகரை அடைவதற்கு ஒரு நாள் ஆகிறது என உ.பி.,யின் சில மாவட்டங்களை சேர்ந்த பல பக்தர்கள் கூறி உள்ளனர். இதனிடையே, பிரயாக்ராஜ் நகரை நோக்கி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருப்பது காரணமாக, கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்நகரில் உள்ள ரயில் நிலையம் வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புனித நீராடி வழிபாடு செய்தார்.