பதிவு செய்த நாள்
11
பிப்
2025
02:02
தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.
முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் கடந்த, 5ம் தேதி, கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவங்கியது. காலையும், மாலையும், யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை, பகல், மாலை என, மூன்று முறை, கற்பகவிருட்சம், அன்ன வாகனம், அனந்தாசனம், மான், சூரிய பிரபை, சந்திர பிரபை, பத்மாசனம், கேடயம், ஆட்டு கிடாய் வாகனம் வாகனங்களில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி திருவீதி விழா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆறாம் நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தைப்பூச திருவிழாவின் ஏழாம் நாளான இன்று அதிகாலை, 1:00 மணிக்கு, கோ பூஜை, 16 வகையான அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 4:00 சுப்பிரமணிய சுவாமி, பவள அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காலை, 6:00 மணிக்கு, உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனைத்தொடர்ந்து, உற்சவரான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, முத்தங்கி அலங்காரத்தில், யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து, திருத்தேரில் எழுந்தருளினார். காலை, 11:05 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, மருதமலையின் மீது நின்று கொண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்கள், விண்ணை பிளக்க, தைப்பூச தேரோட்டம் நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று மாலை முதல் இன்று வரை, பல லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக மருதமலைக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.இன்று தைப்பூச விழாவை முன்னிட்டு மருதமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.