ஊட்டி; ஊட்டி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. புனரமைப்பு பணிகள் முடிந்ததை அடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, நேற்று துவங்கிய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, காலை, 8:45 மணி முதல் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்யாக வாஜனம், வாஸ்து சாந்தி, பேரீதாடனம், புஷ்பாண்ட பூஜை, மகா கணபதி யாகம், மகாலட்சுமி யாகம், நவக்கோள் யாகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை, 7:20 மணி முதல் விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால ஹோமம், நாடி சந்தனம், மகா பூர்ணஹுதி, மகா தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை, 9:20மணிக்கு பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் தலைமையில், பரிவார மூர்த்திகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 9:30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவைகள் நடந்தது. விழாவை ஒட்டி திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.