பதிவு செய்த நாள்
27
பிப்
2025
12:02
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மஹா சிவராத்திரி விழாவில் நேற்று நடந்த லட்சார்ச்சனையை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மாசி மாதம், அமாவாசைக்கு முன்பு வரக்கூடிய திரயோதசி மற்றும் சதுர்த்தசி திதிகள் சந்திக்கும் நாளில், பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும், யார் பெரியவர் என்ற அகந்தையை ஒழித்து, ஜோதிப்பிழம்பாகவும், லிங்கோத்பவர் வடிவாகவும், அருணாசலேஸ்வரர் காட்சி கொடுத்த தலம் திருவண்ணாமலை. அவ்வாறு காட்சி கொடுத்த நாளே, மஹா சிவராத்திரியாக கொண்டாடப் படுகிறது.
இதையொட்டி நேற்று, அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலையில், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, லட்சார்ச்சனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, முதல் கால பூஜை, இரவு, 11:30 மணிக்கு, 2ம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி மூல கருவறையின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம், இன்று அதிகாலை, 27ம் தேதி அதிகாலை, 2:30 மணிக்கு, 3ம் கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு, 4ம் கால பூஜை நடக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. மேலும், உலக நன்மை வேண்டி, மஹா சிவராத்திரியையொட்டி ஒரு நாள் பகல் மற்றும் இரவு முழுவதும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன், கிரிவலம் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை சங்கம் சார்பில், இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.