பதிவு செய்த நாள்
28
பிப்
2025
12:02
கோவை; சொக்கம்புதுார் மாசாணி அம்மன் கோவிலுக்கு அருகே நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் எலும்பை கடித்து ஆவேச நடனமாடினார் மாசாணியம்மன் கோவில் அருளாளி.
கோவை சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோவிலில் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் மாசாணியம்மன் சுதைசிற்பம் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாசாணியம்மன் சுதை உருவத்தின் முன் மேளதாளம் முழங்க நள்ளிரவு பூஜைகள் நடந்தன. மயான கொள்ளை பூஜையில் ஈடுபட்ட அருளாளி, கையில் அரிவாள், சூலாயுதம் ஆயுதங்களுடன் மாசாணி யம்மனின் களிமண் உருவத்தைச் சுற்றி ஆவேச நடனமாடி பூஜை செய்தார். அருள் வந்த அருளாளி. களிமண்ணால் செய்த மாசாணியம்மனின் மீதிருந்து கைப்பிடி மண்ணை எடுத்து, அதிலிருந்த மனித எலும்பை வாயில் கடித்தபடி நடனமாடினார். பின்பு மாசாணியம்மனின் உருவத்தின் மீதிருந்து எடுத்த மண்ணை சொக்கம்புதூரில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு எடுத்துச்சென்று, அங்கு அந்த மண்ணை வைத்து நள்ளிரவு பூஜை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் நள்ளிரவு மயானக்கொள்ளை நிகழ்ச்சியிலும், கோவிலில் நடந்த நள்ளிரவு பூஜையிலும் பங்கேற்றனர்.நள்ளிரவில் ஆக்ரோஷ நடனமாடி நடந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபட்டால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. இதனை தொடர்ந்து இன்று சக்தி கரகம் அழைத்தலும், நாளை அன்னதான நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதே போல் சுண்டக்காமுத்துார் அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு அருகே உள்ள மயானத்தில் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், கோவிலில் நள்ளிரவு சிறப்பு பூஜைகள்நடந்தன. பேரூர் பட்டீஸ்வரர், கோட்டை சங்கமேஸ்வரர், பேட்டை விஸ்வேஸ்வரர் கோவில்களில் நேற்று சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்தன திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.