பதிவு செய்த நாள்
28
பிப்
2025
12:02
பல்லடம்; பல்லடத்தில், ஓம் சக்தி பராசக்தி’ கோஷம் முழங்க, பக்தர்கள் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர். பல்லடத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில், 50ம் ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த, 25ம் தேதி கொடியேற்று விழாவுடன் துவங்கியது. யாகசாலை பூஜை, மாவிளக்கு, அக்னி குண்டம் வளர்த்தல், அம்மை அழைத்தல் என, பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, அக்னி குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது. ஓம்சக்தி பராசக்தி என்ற கோஷம் முழங்க, தாய்மார்கள், வயதானவர்கள், இளம் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர், பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். இதையடுத்து, அம்மனை குளிர்விக்க வேண்டி வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்துடன் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொங்கல் வைத்தல், மகா அபிஷேகம், மஞ்சள் நீராடல் ஆகியவற்றைத் தொடர்ந்து, இன்று நடைபெற உள்ள வசந்த விழாவுடன் குண்டம் விழா நிறைவடைகிறது.