ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் மாடுகள் உலா : பக்தர்கள் பீதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2025 05:03
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை சாலையில் உலா வரும் மாடுகளால், பக்தர்கள் பீதி அடைகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் பூஜை செய்து கடலில் புனித நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுகின்றனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு பக்தர்கள் பூஜை செய்த வாழை பழங்களை அங்கு நிற்கும் ஒரிரு மாடுகளுக்கு தானமாக கொடுப்பது வழக்கம். இதனை பயன்படுத்தி கால்நடை வளர்ப்பு 20க்கும் மேலான மாடுகளை அக்னி தீர்த்த கடற்கரையில் விடுகின்றனர். இந்த மாடுகளுக்கு கீரை தானம் செய்யுங்கள் என சிலர் கூவி பக்தரிடம் கீரை விற்கின்றனர். இக்கீரையை திண்ணும் ஆவலில் ஆக்ரோஷமாக ஓடி வரும் மாடுகள் பக்தர்களை முட்டி தள்ளிவிட்டு கீரையை உட்கொள்கிறது. இதனால் பக்தர்கள் பலரும் காயம் அடைந்துள்ளனர். இந்த மாடுகளை அப்புறப்படுத்தி, கீரை விற்பதை தடுக்க ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் பக்தர்கள் காயமடைந்து மனதிருப்தி இன்றி திரும்பிச் செல்கின்றனர். ஆகையால் பக்தர்களை அச்சுறுத்தும் மாடுகளை பிடித்து, கால்நடை வளர்ப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.