பதிவு செய்த நாள்
07
மார்
2025
10:03
சென்னை; இந்த ஆண்டுக்கான ராமேஸ்வரம் -– காசி ஆன்மிக பயணம் மேற்கொள்ளும், 60 மூத்த குடிமக்களுக்கு, பயண வழிப் பைகளை வழங்கி, அமைச்சர் சேகர்பாபு வழியனுப்பி வைத்தார். பின், அமைச்சர் அளித்த பேட்டி: கடந்த, 2022- – 23ம் நிதியாண்டில் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு, 200 மூத்த குடிமக்களையும், 2023- – 24ம் நிதியாண்டில், 300 மூத்த குடிமக்களையும், ஆன்மிக பயணமாக, அரசு மானியத்தில் அனுப்பி வைத்தோம். இந்த நிதியாண்டில், 420 மூத்த குடிமக்கள் காசிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதில் முதல் கட்டமாக, 60 மூத்த குடிமக்கள், நேற்று ரயில் வாயிலாக புறப்பட்டனர். இதற்காக, அரசு நிதி 2.30 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அறுபடை வீடுகளுக்கு, 2,022 மூத்த குடிமக்கள், 2.14 கோடி ரூபாய் செலவில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆடி மாதங்களில் கோவில்களுக்கு, 1,003 மூத்த குடிமக்களும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்களுக்கு, 1,008 மூத்த குடிமக்களும் அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். ஆன்மிக பயணங்களுக்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு இருப்பதால், வரும் ஆண்டுகளில் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் பழனி, ரயில்வே ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல கூடுதல் பொது மேலாளர் பங்கஜ் ரவிஷ் பங்கேற்றனர்.