பதிவு செய்த நாள்
07
மார்
2025
11:03
அவிநாசி; கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனரால் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பிரசித்தி பெற்றதுமான, திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசித் தேர்த்திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கொடி மரம் அருகில், விநாயகப் பெருமான், சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர் மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்ற பூஜைகள் நடைபெற்றன. தேர்த் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. அவ்வகையில், இன்று (7ம் தேதி) சூரிய சந்திர மண்டல காட்சி, நாளை (8ம் தேதி) பூத வாகனம், சிம்ம வாகன காட்சி, 9ம் தேதி புஷ்ப விமான காட்சி, 10ம் தேதி பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சி அளித்தல், 11ம் தேதி திருக்கல்யாணம், யானை வாகன மற்றும் அன்ன வாகன காட்சி, 12, 13 தேதிகளில் திருத்தேர் வடம் பிடித்தல், 14ம் தேதி பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகன காட்சி, தெப்பத்தேர் நிகழ்ச்சிகளும்,15ம் தேதி ஸ்ரீ சுந்தரர் வேடுபறி விழாவும் நடைபெறுகிறது. மேலும், 16ம் தேதி பிரம்மதாண்டவ தரிசன காட்சி, 17ம் தேதி மஞ்சள் நீர் விழா, மயில் வாகன காட்சியுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.