பதிவு செய்த நாள்
10
மார்
2025
03:03
மஞ்சூர்; மஞ்சூர் அருகே, காத்தாடிமட்டம் பரமூலையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மஞ்சூர் அருகே, காத்தாடிமட்டம் அருகே, பரமூலையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவில் புதுப்பித்து வர்ண வேலைகள் செய்யப்பட்டு, புதிதாக முருகன் திருமேனி மற்றும் கொடிமர ஸ்தாபனம் செய்யப்பட்டது. கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி கடந்த, 8ம் தேதி மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நவகிரக ஹோமம், அஸ்திர ஹோமம், முளைப்பாரி கங்கை தீர்த்தம் ஊர்வலம், புண்ணியாக வாஜனம் மண்டல பூஜை, வேதிகார்ச்சனை, முதல் கால வேள்வி, யந்திர ஸ்தாபனம் நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை புண்ணியாகவாஜனம், சூரிய பூஜை, இரண்டாம் கால வேள்வி, நாடி சந்தனம் நடந்தது. காலை 9:40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தசதரிசனம் நடந்தது. சர்வ சாதகங்களை, ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில் அர்ச்சகர் திருஞான சம்பந்த சிவன் தலைமையில், கும்பகோணம் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் நடத்தினர். கும்பாபிஷேக கலசங்களை அர்ச்சகர்கள் எடுத்து கோவிலை வலம் வந்தபோது கோபுரத்தின் மேற்பகுதியில் மூன்று கழுகுகள் வட்ட மடித்தது பக்தர்களை பரவசப்படுத்தின.